search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரேசன் அரிசி கடத்தல்"

    • ரேசன் அரிசி கடத்தல் சம்மந்தமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.
    • வாகனத்தில் 1000 கிலோ ரேசன் அரிசியை சட்டவிரோதமாக கடத்தி சென்றது தெரிய வந்தது.

    தருமபுரி:

    உணவுபொருள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல் துறை தலைவர் ஜோஷி நிர்மல்குமார், உத்தரவின் பேரில் கோவை மண்டலம் போலீஸ் சூப்பிரண்டு சந்திரசேகரன் மற்றும் போலீஸ் துணை சூப்பிரண்டு விஜயகுமார், அறிவுறுத்தலின் பேரில் தருமபுரி மாவட்டத்தில் ரேசன் அரிசி கடத்தல் சம்மந்தமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் பஞ்சபள்ளி அருகே நல்லம்பட்டி கொல்லபுரி மாரியம்மன் கோவில் எதிரில் கிருஷ்ணகிரி அலகு சப்-இன்ஸ்பெக்டர் அருள்பிரகாஷ் மற்றும் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுப்பட்டு கொண்டிருந்தனர்.

    அப்போது அந்த வழியாக வந்த சந்தேகத்திற்கு உட்பட்ட கர்நாடகா பதிவெண் கொண்ட ஆம்னி வேன் வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அந்த வாகனத்தில் 1000 கிலோ ரேசன் அரிசியை சட்டவிரோதமாக கடத்தி சென்றது தெரிய வந்தது.

    அவரிடம் விசாரணை செய்தபோது கர்நாடகா மாநிலம், ராம் நகர் மாவட்டம் கொல்லி கனஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த சோமசேகரன் மகன் பிரமோத் (22) என தெரிய வந்தது. மேலும் கடத்தி வரப்பட்ட ரேசன் அரிசியை கர்நாடகா மாநிலம் ராம்நகரில் உள்ள டிபன் கடைகளுக்கு அதிக லாபத்திற்காக விற்பனை செய்ய கடத்தியதும் தெரிய வந்தது. இதனை அடுத்து போலீசார் வழக்கு பதிவுசெய்து கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

    • குமரி மாவட்ட பதிவு எண் கொண்ட டாரஸ் லாரியை தடுத்து நிறுத்தி சோதனை நடத்தினர்.
    • ரேசன் அரிசியை கேரளாவுக்கு கடத்தி அனுப்பும் நபரையும், லாரியின் உரிமையாளரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

    கடையநல்லூர்:

    தமிழகத்தில் இருந்து செங்கோட்டை வழியாக அதிக அளவில் ரேசன் அரிசி கடத்தப்படுவதாக தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமாருக்கு பொதுமக்களிடம் இருந்து தொடர்ச்சியாக புகார் வந்தது.

    அதனை தொடர்ந்து போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின்பேரில் இன்று அதிகாலை 4 மணி அளவில் கேரளாவிற்கு செல்லும் சரக்கு வாகனங்களை கடையநல்லூர் இன்ஸ்பெக்டர் ராஜா தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் சாமுவேல் ராஜ், தீபன் குமார் மற்றும் போலீசார் கடையநல்லூர் வழியாக கேரளாவுக்கு செல்லும் மதுரை-தென்காசி தேசிய நெடுஞ்சாலையில் கிருஷ்ணாபுரம் சோதனை சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது குமரி மாவட்ட பதிவு எண் கொண்ட டாரஸ் லாரியை தடுத்து நிறுத்தி சோதனை நடத்தினர். அதில் லாரியின் ஓரங்களில் கோழி தீவனங்களை வைத்துவிட்டு மையப்பகுதியில் நூற்றுக்கணக்கான ரேசன் அரிசி மூட்டைகளை மறைத்து வைத்து கடத்தி சென்றது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதையடுத்து போலீசாரின் தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு குடிமைப்பொருள் குற்ற புலனாய்வு அதிகாரிகள் அங்கு விரைந்து வந்தனர். பின்னர் லாரியுடன் அதில் இருந்த 12 டன் ரேசன் அரிசியை பறிமுதல் செய்தனர்.

    இதுதொடர்பாக கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு தாலுகா வேம்புவிளை பாலப்பள்ளம் என்ற ஊரை சேர்ந்த லாரியின் டிரைவர் அசோக் (வயது 34) என்பவரை கைது செய்தனர். ரேசன் அரிசியை கேரளாவுக்கு கடத்தி அனுப்பும் நபரையும், லாரியின் உரிமையாளரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

    • கடத்தி செல்ல இருந்த ரேஷன் அரிசி மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
    • அரிசி மூட்டைகளை அங்கேயே விட்டுவிட்டு மர்மநபர்கள் அங்கிருந்து தப்பிச்சென்றனர்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் தமிழக அரசால் வழங்கப்படும் ரேசன் அரிசியை கள்ளச்சந்தையில் விற்பனை செய்வதை தடுக்க துறைசார்ந்த அதிகாரிகள் தொடர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அதன்படி மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் பழனிவேல் தலைமையில் அதிகாரிகள் நாகை மாவட்டத்தில் இன்று அதிகாலை முதல் 9 இடங்களில் சோதனை மேற்கொண்டனர்.

    அப்போது வேளாங்கண்ணி அருகே பறவை காய்கறி சந்தையில் விற்பனைக்கு வைக்கப்பட்ட ரேசன் அரிசி மூட்டைகள், நாகை பேருந்து நிலையத்தில் இருந்து அரசு பஸ்சில் காரைக்காலுக்கு கடத்தி செல்ல இருந்த ரேசன் அரிசி மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

    அதிகாரிகளை கண்டதும் அரிசி மூட்டைகளை அங்கேயே விட்டுவிட்டு மர்மநபர்கள் அங்கிருந்து தப்பிச்சென்றனர். அவர்களை அதிகாரி தேடிவருகின்றனர். 32 மூட்டைகளில் பறிமுதல் செய்யப்பட்ட சுமார் 800 கிலோ எடையுள்ள ரேசன் அரிசியை பனங்குடி பகுதியில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக வட்ட கிடங்கில் அதிகாரிகள் ஒப்படைத்தனர்.

    அப்போது பறக்கும்படை துணை வட்டாட்சியர் ரகு, வாணிப கழக தர ஆய்வாளர் பிரபாகரன் அலுவலக உதவிஆய்வாளர்கள் ராமன், பூவரசன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    • 50 கிலோ அளவிலான 452 மூட்டைகளில் 22 ஆயிரத்து 600 கிலோ ரேசன் அரிசி கடத்த முயன்றது தெரிந்தது.
    • அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கிருஷ்ணகிரி கிளை சிறையில் அடைக்கப்பட்டனர்.

    தருமபுரி:

    உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் காவேரிப்பட்டணம் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது சேலம்- கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் வந்த மினி லாரியை மடக்கி சோதனையிட்டனர்.

    அதில், 50 கிலோ அளவிலான 452 மூட்டைகளில் 22 ஆயிரத்து 600 கிலோ ரேசன் அரிசி கடத்த முயன்றது தெரிந்தது. அதை தொடர்ந்து லாரிக்கு பாதுகாப்பாக கார் வந்ததும் தெரிந்தது. இதையடுத்து லாரி, கார்களில் இருந்த விருதுநகர் மாவட்டம், வெள்ளியம்பலத்தை சேர்ந்த ராமச்சந்திரன் (வயது 48), தர்மபுரி மாவட்டம் காரிமங்கலத்தை சேர்ந்த சேட்டு (28), ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை சேர்ந்த சுதாகர் (34), கர்நாடக மாநிலம் பங்காருபேட்டை நாகராஜ் (58), சேலம் மாவட்டம், ஓமலூர் ராமச்சந்திரன் (28) ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

    விசாரணையில் அவர்கள் தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் ரேசன் அரிசியை வாங்கி, கர்நாடக மாநிலத்தில் அதிக விலைக்கு விற்பதற்காக கொண்டு சென்றது தெரிந்தது. அவர்கள் அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கிருஷ்ணகிரி கிளை சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் ரேசன் அரிசி, லாரி பறிமுதல் செய்யப்பட்டது.

    • விடையூர் பகுதியில் வேனில் கடத்தி வந்த ஒரு டன் ரேசன் அரிசியை குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை போலீசார் பறிமுதல் செய்தனர்.
    • வேனில் இருந்த ஒருவரை போலீசார் கைது செய்து ரேசன் அரிசியையும் வேனையும் பறிமுதல் செய்தனர்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் அருகே விடையூர் பகுதியில் வேனில் கடத்தி வந்த ஒரு டன் ரேசன் அரிசியை குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை போலீசார் பறிமுதல் செய்தனர். அதனை ஆந்திராவுக்கு கடத்த முயன்றது தெரிந்தது. இதையடுத்து வேனில் இருந்த ஒருவரை போலீசார் கைது செய்து ரேசன் அரிசியையும் வேனையும் பறிமுதல் செய்தனர்.

    இதேபோல் பொன்னேரி அருகே கிளிக்கொடி கிராமத்தில் உள்ள பெருமாள் கோவில் பின்புறம் கேட்பாரற்று கிடந்த ஒரு டன் ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. 

    • கடந்த ஒரு மாதத்தில் ஈரோடு சரகத்தில் ரேஷன் அரிசி கடத்தல் தொடர்பாக 81 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
    • கோர்ட்டு விசாரணையில் உள்ள வழக்குகளில் 20 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டு, சம்பந்தப்பட்டவர்களுக்கு தண்டணை வழங்கப்பட்டுள்ளன.

    ஈரோடு:

    குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை இயக்குனர் வன்னியப்பெருமாளின் உத்தரவின்பேரில், கோவை மண்டல போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி மற்றும் ஈரோடு சரக போலீஸ் துணை சூப்பிரண்டு சுரேஷ்குமார் ஆகியோர் ரேஷன் அரிசி கடத்தல் மற்றும் பதுக்கல் குற்றங்களில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

    அதன்படி ஈரோடு சரகத்துக்கு உள்பட்ட ஈரோடு, திருப்பூர் மற்றும் நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் ரேஷன் அரிசி கடத்துவதை தடுக்க தொடர்ந்து குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இந்த நிலையில் கடந்த ஒரு மாதத்தில் ஈரோடு சரகத்தில் ரேஷன் அரிசி கடத்தல் தொடர்பாக 81 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்கில் தொடர்புடைய 83 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் இருந்து 23 டன் ரேஷன் அரிசி மற்றும் ரேஷன் அரிசி கடத்தலுக்கு பயன்படுத்திய இருசக்கர வாகனங்கள் 10-ம், 3 சக்கர வாகனம் ஒன்றும், 4 சக்கர வாகனங்கள் 6-ம் என மொத்தம் 17 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

    மேலும் அரசு மானியத்தால் வழங்கப்பட்ட வீட்டு உபயோக கியாஸ் சிலிண்டர்களை முறைகேடாக பயன்படுத்தியது தொடர்பாக 18 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 18 கியாஸ் சிலிண்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

    கோர்ட்டு விசாரணையில் உள்ள வழக்குகளில் 20 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டு, சம்பந்தப்பட்டவர்களுக்கு தண்டணை வழங்கப்பட்டுள்ளன. நிலுவையில் உள்ள வழக்குகளில் ஆஜராகாத 10 பேர் மீது பிடியாணை நிறைவேற்றப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.

    மேலும் ஈரோடு சரகத்துக்கு உள்பட்ட தமிழகம்-கர்நாடகா மாநில எல்லையான தாளவாடி, ஆசனூர், பர்கூர், கடம்பூர் மற்றும் தமிழக-கேரளா மாநில எல்லை பகுதியான உடுமலைப்பேட்டை அமராவதி நகர் ஆகிய சோதனை சாவடிகளிலும் இரவு, பகலாக போலீசார் வாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறார்கள்.

    மாதம் தோறும் சிறப்பு கூட்டங்கள் நடத்தப்பட்டு ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை போலீசார் தெரிவித்துள்ளார்.

    • தாசில்தாரின் ஜீப்பில் ஜி.பி.எஸ். கருவி ஒன்று பொருத்தப்பட்டிருந்தது.
    • ரேஷன் அரிசி நூதன முறையில் கடத்திய நபரும், அதற்கு உடந்தையாக இருந்த ஜீப் டிரைவரும் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்ட பறக்கும்படை தாசில்தாராக பணியாற்றி வருபவர் இளங்கோ.

    இவர் தலைமையிலான குழுவினர் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் வாகன சோதனை நடத்தி ஆந்திர, கர்நாடக மாநிலங்களுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதை தடுத்து வருகிறார்கள். மேலும் அரிசி கடத்தலில் ஈடுபடுபவர்களை பிடித்து, வாகனங்களை பறிமுதல் செய்து வருகிறார்கள்.

    இந்த தாசில்தார் இளங்கோ பயன்படுத்தி வரும் அரசு ஜீப்பில் டிரைவராக கிருஷ்ணகிரியை அடுத்த பி.சி.புதூரை சேர்ந்த சுப்பிரமணி (59) என்பவர் பணியாற்றி வந்தார்.

    ஆரம்பத்தில் ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற பிறகு, கலெக்டரின் டிரைவராக பணியாற்றினார். அதன் பிறகு இவர் பணி மாறுதலில் பறக்கும் படை தாசில்தார் இளங்கோவின் ஜீப் டிரைவராக பணியாற்றி வந்தார்.

    இந்த நிலையில் தாசில்தாரின் ஜீப்பில் ஜி.பி.எஸ். கருவி ஒன்று பொருத்தப்பட்டிருந்தது. இதை கவனித்த அவர், இது குறித்து மாவட்ட கலெக்டரிடம் புகார் செய்தார். அந்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்க அவர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் தாக்கூருக்கு பரிந்துரை செய்தார்.

    இதையடுத்து போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரில் கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் விசாரணை நடத்தினார்கள். மேலும் சம்பந்தப்பட்ட தாசில்தாரின் டிரைவர் சுப்பிரமணியை பணிமாறுதல் செய்து கிருஷ்ணகிரி தாசில்தார் ஜீப்பின் டிரைவராக நியமிக்கப்பட்டார்.

    இந்த நிலையில் போலீசார் நடத்திய விசாரணையில், ஜி.பி.எஸ். கருவியை ரேஷன்அரிசி கடத்தலில் ஈடுபட்டு வந்த குருபரப்பள்ளி அருகே உள்ள நடுசாலையை சேர்ந்த தேவராஜ் (33) என்பவர் பொருத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த கருவி தேவராஜின் செல்போன் எண்ணுடன் இணைப்பில் இருந்தது தெரிய வந்தது.

    இதைத் தொடர்ந்து தேவராஜை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினார்கள். அதில் அவர் தான் ரேஷன் அரிசி கடத்தலுக்காக ஜி.பி.எஸ். கருவியை பறக்கும் படை தாசில்தாரின் ஜீப் டிரைவராக இருந்த சுப்பிரமணியிடம் வழங்கியதாகவும், அதை அவர் தான் ஜீப்பில் பொருத்தி எனக்கு உதவி செய்தார் என்றும் கூறினார்.

    இதையடுத்து ஜீப் டிரைவர் சுப்பிரமணியிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் அரிசி கடத்தல் மன்னன் தேவராஜ் கூறியவை உண்மை என தெரிய வந்தது. இதை தொடர்ந்து ஜி.பி.எஸ். கருவி வாங்கி தாசில்தாரின் ஜீப்பில் பொருத்தி ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்டு வந்த தேவராஜ், உடந்தையாக இருந்த தாசில்தாரின் ஜீப் டிரைவர் சுப்பிரமணி ஆகிய 2 பேரையும் கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் நேற்று கைது செய்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வகிறார்கள்.

    கிருஷ்ணகிரியில் ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க செல்லும் பறக்கும் படை தாசில்தாரின் ஜீப்பிலேயே ஜி.பி.எஸ். கருவியை பொருத்தி, வாகனத்தை கண்காணித்து, ரேஷன் அரிசி நூதன முறையில் கடத்திய நபரும், அதற்கு உடந்தையாக இருந்த ஜீப் டிரைவரும் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கி கடத்தி வந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
    • ரேசன் அரிசி கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

    போரூர்:

    சென்னை, எம்.ஜி.ஆர் நகர் பகுதியில் இருந்து ரேஷன் அரிசி ஆந்திர மாநிலத்துக்கு கடத்தப்படுவதாக குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை டி.எஸ்.பி சம்பத்துக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து சப் - இன்ஸ்பெக்டர் ராஜா பாரதிதாசன் தலைமையிலான போலீசார் ஜாபர்கான் பேட்டை காசி தியேட்டர் அருகே தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அவ்வழியே வந்த வேனை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் ஏராளமான ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கி கடத்தி வந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதையடுத்து ரேசன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட கொடுங்கையூரை சேர்ந்த கமல்கிஷோர் (26), வியாசர்பாடியை சேர்ந்த மணி கண்டன் (23) ஆகிய 2பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 1600 கிலோ ரேஷன் அரிசி மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது. ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபடும் நபர்கள் மீது உணவுப் பொருள்கள் பதுக்கல் சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.

    • தேனியில் இருந்து மதுரைக்கு கடத்தப்பட இருந்த அரிசி மூட்டைகளை அதிகாரிகள் கைப்பற்றி வாணிப கிட்டங்கியில் ஒப்படைத்தனர்.
    • பறிமுதல் செய்யப்பட்ட லாரியின் பதிவு எண் செங்கல்பட்டு மாவட்ட எண்ணாக இருப்பதால் அதன் உண்மைத் தன்மையையும், போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    ஆண்டிபட்டி:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி வைகை அணை ரோட்டில் பறக்கும்படை தனி தாசில்தார் முத்துக்குமார் தலைமையிலான குழுவினர் கடந்த 30-ந் தேதி வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டு இருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த மினி லாரியை நிறுத்தி சோதனையிட்டனர்.

    அந்த லாரியில் 3 டன் அளவில் ரேசன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தேனியில் இருந்து மதுரைக்கு கடத்தப்பட இருந்த அந்த அரிசி மூட்டைகளை அதிகாரிகள் கைப்பற்றி வாணிப கிட்டங்கியில் ஒப்படைத்தனர். மேலும் லாரியையும் பறிமுதல் செய்தனர்.

    இந்த சம்பவத்தின் போது லாரி டிரைவர் தப்பி ஓடி விட்டார். அவரது செல்போனை பறிமுதல் செய்த அதிகாரிகள் அதில் பதிவான அழைப்புகளை உத்தமபாளையம் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு அனுப்பி வைத்தனர். ரேசன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட தேனியைச் சேர்ந்த ஒச்சு, லாரி டிரைவர், லோடு மேன் பீமன், நுகர்பொருள் வாணிப கழக இளநிலை தர நிர்ணய ஆய்வாளர் தமிழ்செல்வன், எழுத்தர் சுரேஷ் ஆகிய 5 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து மாவட்ட வழங்கல் அலுவலர் இந்துமதி, நுகர்பொருள் வாணிப கழக மண்டல முதுநிலை மேலாளர் செந்தில்குமார் முன்னிலையில் ஆய்வு செய்து அதன் அறிக்கையை கலெக்டருக்கு அளித்தனர்.

    அந்த அறிக்கையில் குடோன் இறநிலை தரஆய்வாளர் தமிழ்செல்வன், பட்டியல் எழுத்தர்கள் சுரேஷ், சதாசிவம் ஆகியோர் ஒச்சு, டிரைவரை பலமுறை செல்போனில் அழைத்து பேசியுள்ளது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து கலெக்டர் ஷஜீவனா பரிந்துரையின் பேரில் தமிழ்செல்வம், சுரேஷ், சதாசிவம் ஆகிய 3 பேரையும் சஸ்பெண்டு செய்து மண்டல முதுநிலை மேலாளர் உத்தரவிட்டார். பறிமுதல் செய்யப்பட்ட லாரியின் பதிவு எண் செங்கல்பட்டு மாவட்ட எண்ணாக இருப்பதால் அதன் உண்மைத் தன்மையையும், போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • 1200 கிலோ ரேசன் அரிசியுடன் 2 வேன்களும் பறிமுதல் செய்யப்பட்டது.
    • ரேசன் அரிசி கடத்தல் கும்பல் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மணலி புதுநகர் அருகே உள்ள கடப்பாக்கம் பகுதியில் சாலையோரம் ஒரே பதிவு எண் கொண்ட 2 வேன்கள் கடந்த 2 நாட்களாக கேட்பாரற்று நின்றது. இதுபற்றி அறிந்ததும் மணலி போலீஸ் உதவி கமிஷனர் தட்சிணாமூர்த்தி, சப்-இன்ஸ்பெக்டர்கள் கல்யாணசுந்தரம், பபிதா ஆகியோர் லாரிகளில் மூட்டைகளாக ரேசன் அரிசி இருப்பது தெரிந்தது.

    மர்ம நபர்கள் ரேசன் அரிசி கடத்தி வந்துவிட்டு போலீசாரின் சோதனைக்கு பயந்து வேன்களை இங்கு நிறுத்தி சென்று இருக்கலாம் என்று தெரிகிறது. 1200 கிலோ ரேசன் அரிசியுடன் 2 வேன்களும் பறிமுதல் செய்யப்பட்டது. ரேசன் அரிசி கடத்தல் கும்பல் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • நேற்று இரவு லோயர்கேம்ப் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மூவேந்தன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு வாலிபரை பிடித்து விசாரித்தனர்
    • அவர் வைத்திருந்த பையில் சோதனை நடத்திய போது 200 கிலோ ரேசன் அரிசி இருந்தது தெரியவந்தது.

    கூடலூர்:

    தமிழகத்தில் இலவசமாக வழங்கப்படும் ரேசன் அரிசியை கேரளாவிற்கு விற்பனை செய்யப்படுவது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக தேனி மாவட்டம், கம்பம், கூடலூர், சின்னமனூர், உத்தமபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ரேசன் அரிசி கடத்தப்படுவதை தடுக்க உணவு கடத்தல் தடுப்பு பிரிவு துறையினர் தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அதன்படி நேற்று இரவு லோயர்கேம்ப் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மூவேந்தன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு வாலிபரை பிடித்து விசாரித்தனர். அவர் முன்னுக்குப்பின் முரணான தகவல் அளித்தார். அவர் வைத்திருந்த பையில் சோதனை நடத்திய போது 200 கிலோ ரேசன் அரிசி இருந்தது தெரியவந்தது. இதனை கடத்தி வந்த லோயர்கேம்ப் எல்.எப். ரோடு பகுதியை சேர்ந்த ராஜா (35) என்பவரை கைது செய்து அவரிடமிருந்த ரேசன் அரிசி மற்றும் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.

    இதுகுறித்து உத்தமபாளையம் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு சப்-இன்ஸபெக்டர் சுப்புலட்சுமியிடம் தகவல் தெரிவித்து ரேசன் அரிசி கடத்திய நபரையும் ஒப்படைத்தனர்.

    • போலீசார் உடனடியாக லாரிகளை சோதனை செய்ததில் 7 டன் 950 கிலோ எடையுள்ள ரேசன் அரிசி மூட்டைகளை போலீசார் கைப்பற்றினர்.
    • பறிமுதல் செய்யப்பட்ட ரேசன் அரிசியை ஸ்ரீபெரும்புதூர் நுகர் பொருள் வழங்கல் வாணிப கிடங்கில் ஒப்படைக்கப்பட்டது.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரத்தை அடுத்த கீழம்பி பகுதியில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை காவல் துறை தலைவர் காமினிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் சென்னை மண்டல பொறுப்பு காவல் கண்காணிப்பாளர் சினேக பிரியா உத்தரவுப்படி, காவல் துணை கண்காணிப்பாளர் மனோகரன் மேற்பார்வையில், போலீஸ் இன்ஸ்பெக்டர் சசிகலா தலைமையில் போலீசார் மற்றும் காஞ்சிபுரம் சிறப்பு தாசில்தார் இந்துமதி ஆகியோர் இணைந்து காஞ்சிபுரம் அருகே கீழம்பி பகுதியில் சோதனை மேற்கொண்டனர்.

    அப்போது வெளிமாநிலத்துக்கு கடத்துவதற்காக காஞ்சிபுரம் - வேலூர் சாலை கீழம்பி என்ற இடத்தில் 2 பேர் ஒரு வாகனத்தில் இருந்து மற்றொரு வாகனத்திற்கு ரேசன் அரிசி மூட்டைகளை ஏற்றிக்கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் போலீசாரை கண்டதும் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.

    போலீசார் உடனடியாக லாரிகளை சோதனை செய்ததில் 7 டன் 950 கிலோ எடையுள்ள ரேசன் அரிசி மூட்டைகளை போலீசார் கைப்பற்றினர்.

    பறிமுதல் செய்யப்பட்ட ரேசன் அரிசியை ஸ்ரீபெரும்புதூர் நுகர் பொருள் வழங்கல் வாணிப கிடங்கில் ஒப்படைக்கப்பட்டது.

    இது சம்பந்தமாக தப்பி ஓடிய நபர்களை போலீசார் தேடி வந்த நிலையில், காஞ்சிபுரம் வெள்ளை கேட் அருகே நின்றுகொண்டு இருந்த சிறுகாவேரிப்பாக்கத்தை சேர்ந்த முரளி (31), கரண் (24) ஆகியோரை இன்ஸ்பெக்டர் சசிகலா கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    ×